வங்கி அதிகாரியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அம்பாறையிலுள்ள பெளத்த விகாராதிபதி ஒருவரிடம் 5 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். குறித்த விகாராதிபதியின் வங்கிக் கணக்கிலிருந்தே இவ்வாறு பணம் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தம்மை வங்கி அதிகாரி என போலியாக கூறிக் கொண்ட இந்த நபர் , விகாராதிபதியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு, விகாராதிபதியின் அடையாள அட்டை இலக்கம் தெளிவாக இல்லை எனவும், மீண்டும் அந்த இலக்கங்களை கூறுமாறும் கேட்டுள்ளார். வங்கி வேலையாகத் தான் இவர் இப்படி அடையாள அட்டை இலக்கத்தை கேட்கின்றார் என நம்பிய விகாராதிபதி குறித்த நபருக்கு தனது அடையாள அட்டை எண்ணை கொடுத்துள்ளார்.
மறுநாள் விகாராதிபதி தனது வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது, அதில் 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸில் செய்ததையடுத்து குறித்த போலி வங்கி அதிகாரியை பொலிஸார் தேடி வருகின்றனர். இதுவொரு குழுவாக செய்த மோசடியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன.