சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் அனுசரணையில் நேற்றையதினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
தியனன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவுத் தூபியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர், சீன ராணுவத்தினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புடன் சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர்.
இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இலங்கை இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.