யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணிக்குள் மருத்துவ கழிவுகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளமையை அயலவர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் ஏற்கனவே மூடை , மூடையாக மருத்துவ கழிவுகள் அக்காணிக்குள் கொட்டி பாதி எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து , வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொறுப்பு கூறி , அவற்றை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஊடாக அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மூன்று மணி நேரம் கடந்தும் சம்பவ இடத்திற்கு வருகை தராதமையால், மக்கள் யாழ். – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உதவி அத்தியட்சகர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி போராட்டத்தை முடித்து வைத்தார்.
தொடர்ந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.
காணிக்குள் எங்கெல்லாம் மருத்துவ கழிவுகளை கொட்டி , தீ மூட்டியுள்ளார்கள் என்பதனை நாம் உங்களுக்கு காண்பிக்கிறோம் என மக்கள் பணிப்பாளரை காணிக்குள் அழைத்து சென்ற போது , பொலிஸார் ஊடகவியலாளர்களை காணிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.