எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஏனைய தேர்தல்களை விட இம்முறை அதிக எண்ணிக்கையிலான சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக ‘பஃரல்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வந்து ‘பஃரல்’ அமைப்பு மற்றும் தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைத்து வருவது தொடர்பாக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்புடன் ‘பஃரல்’ அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தேர்தல் நடைபெற முன்னர் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல், அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பில் ‘பஃரல்’ அமைப்பு கடுமையான அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ‘மார்ச் 12’ அமைப்பின் உறுப்பினர்கள் 5,000 பேர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்றில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு மாநாடொன்று கொழும்பு விஹார மகாதேவி பூங்கா திறந்த வெளியரங்கில் நடத்தப்பட்டிருந்ததாகவும் ‘பஃரல்’ அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.