எதிர்காலத்தில் அரசாங்கம் மாறினாலும் கடன் வழங்கிய நாடுகளுடனான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மாற்றாமல் தொடர்வது இன்றியமையாதது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்துத் தெரிவித்தார்.
பெறப்பட்ட கடன்கள் மற்றும் செலவிடப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு என்ன நடந்தது என கணக்காய்வு செய்வதும், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் மூலம் கடனை செலுத்துவது தொடர்பில் இலங்கை கொண்டுள்ள கடப்பாடு ஆகியன வும் வெவ்வேறான இரண்டு விடயங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, கணக்காய்வு நடத்தப்படுகின்றது என சர்வதேச நிதிச் சந்தைக்கு அறிவிப்பதன் மூலம் கடன் வழங்கிய நாடுகளுக்கு வழங்க வேண்டிய பில்லியன் கணக்கான டொலர் கடனை வழங்காமல் தவிர்ப்பதென்பது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியமாக இருக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படுவதாகும், மாறாக இது அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தமல்ல. இதனால், இலங்கையின் உள்ளக கணக்காய்வுக்காக வெளிநாடுகள் காத்திருப்பதில்லை என்பதும், உலக நிதிச் சந்தை அவ்வாறு இயங்குவதல்ல என்பது தனக்கும் தனது குழுவினருக்கும் அனுபவத்தில் தெரிந்த ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கடன் மறுசீரமைத்தல் ஒப்பந்தம் விரைவில் செய்யப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் கடன் கொடுத்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இதில் எந்தவொரு அரசியலும் இல்லை எனவும் வலியுறுத்தினார்.
இந்த மறுசீரமைப்பு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் வங்குரோத்து நிலை நீங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மேம்படும் எனவும் இதனைச் செய்வதன் மூலம் மீண்டும் பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
வங்குரோத்து நிலை நீக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து மேற்கொள்ளும் நிர்மாணப் பணிகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், இலங்கை மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.