புலிகளுக்கு எதிராக ஒன்றாக போரிட்ட நம் ராணுவத்தினர் இன்று ரஷ்யா, உக்ரெய்னில் தமக்குள் போரிடுகின்றனர்! தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!

அன்று எல்ரீரீக்கு எதிராகப் போரிட்ட இலங்கை இராணுவம் இன்று ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிர் எதிராக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; “நமது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ரஷ்யாவில் முகாம் உதவியாளர்களாக கொண்டு செல்லப்படுகின்றனர்.

இதில் பெரும் மோசடி நடக்கின்றது. எங்கள் ராணுவத்தினரை முகாம் உதவியாளர்களாக அழைத்துச் சென்று பின்னர் ரஷ்ய-உக்ரேனிய போரில் தள்ளுகின்றனர். இவ்வாறே குசாந்த குணதிலக்க என்ற ராணுவ வீரரை  அழைத்துச் சென்று போர் டாங்கியில் அமர்த்தியுள்ளனர். அந்த போர் டாங்கி வெடித்து சிதறியதில் 2 பேர் பலியாகினர். அதிலிருந்து குசந்த தப்பித்தாலும், அவர் எங்கு உள்ளார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. அவர் நமது ராணுவத்தில் திறமையான ஒரு வீரராக இருந்தவராவார். இந்தியாவிலுள்ள சட்டத்தரணி ஒருவரது நிறுவனத்தினூடாகவே அங்கு அவர் சென்றுள்ளார். இவ்வாறு ஏராளமானோர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா 18 லட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

நமது ராணுவத்தில் இருந்தவர்கள் ரஷ்யா, உக்ரைன் என தரப்பிலிருந்து ஒருவருக்கு எதிராக ஒருவர் போர் புரிகின்றனர். அங்கு இலங்கை இராணுவம் இரு புறமும் பிரிந்துள்ளது. நமது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாததாலேயே இவ்வாறு நடக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என கேட்க விரும்புகின்றேன். ஏனெனில், இன்று இலங்கை இராணுவத்தினர் இரு தரப்பிலும் சண்டையிடுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம். இன்று இலங்கை இராணுவம் வேறு இரு நாடுகளுக்கிடையே ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply