வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று வாகன இறக்குமதியாளர்களால் தனக்கு வழங்கப்படவுள்ளதாகவும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் குறித்தான விரிவான விபரங்கள் அந்த அறிக்கையில் அடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்தார்.
வாகன இறக்குமதித் துறையில் நிபுணத்துவம் மிக்கவர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதால், வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பில் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பை அது ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினருக்கும் இராஜாங்க அமைச்சருக்குமிடையே கலந்துரையாடலொன்று நிதி அமைச்சு காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இதன் போது அனைத்து வகை வாகனங்களையும் ஒரே தடவையில் இறக்குமதி செய்யாமல் பல்வேறு பிரிவுகளிலும் கட்டம் கட்டமாக வானங்களை இறக்குமதி செய்வதே உசிதமானதாக இருக்கும் என மேற்படி சங்கத்தினர் அங்கு தெரிவித்துள்ளனர். அதன்படி, பொது போக்குவரத்து வாகனங்கள், பாவித்த வாகனங்கள், தனிப்பட்ட வாகனங்கள் என கட்டம் கட்டமாக இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதே பொருத்தமாக இருக்கும் எனவும் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.