நுவரெலியா – கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் உடைந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஒன்று காணப்படுவதால் அதை உடனடியாக மாற்றி தருமாறு குறித்த தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாவலர் புரத்தை அண்டி வாழும் குடியிருப்பிலேயே இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் இதனால் பகலிரவு வேளைகள் மற்றும் அதிகமான காற்று, மழை நேரங்களில் குறித்த மின் கம்பம் சாய்வது போல் உணர்வதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஏறத்தாழ 15 குடும்பங்களை சார்ந்த 80க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் குறித்த குடியிருப்பில், இவ்வாறானதொரு மின்கம்ப பிரச்சினை கடந்த 1 வருடகாலமாக காணப்படுகின்ற நிலையில் மரத்தால் அமைக்கப்பட்ட குறித்த கம்பத்தின் அடிப்பகுதி கறையான் அரித்துள்ளதோடு சிதைவுக்கும் உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக உயிர்பயத்தோடு வாழும் இம்மக்களுக்கு உடன் தீர்வு வழங்குமாறு ஹெரோ தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.