2024 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக இலங்கை, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகியவை பெயரிடப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டின் முதல் காலாண்டில், சுமார் 285 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் சுற்றுலா சென்றுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.
அடுத்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் சர்வதேச அளவில் சுற்றுலா செல்ல உள்ளனர், மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டும் 24 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிடுகிறது.
இந்த கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ஃபோர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கை, கிரீஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளை பயணத்திற்கு ஏற்ற இடங்களாக அறிமுகப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, இலங்கை பசுமையான மேட்டு நிலங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட ஒரு தீவு என்றும், பாலியைப் போலவே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சொகுசு நிலை வசதிகள் உள்ளன எனவும் இயற்கையின் அழகை அனுபவிக்க 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைக்கால நிகழ்வுகளில் இருந்து மீண்டு, இந்த வருடத்தில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை முன்னணியில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.