கடமையை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட குழப்ப நிலை!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில் வைத்திய அத்தியட்சகராக முன்னர் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது.

வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.

இதனையடுத்து சில மணிநேரங்கள் வைத்தியசாலை அலுவலக அறையில் சில கடமைகளில் ஈடுபட்டு விட்டு இராமநாதன் அர்ச்சுனா வெளியேறிச் சென்றார்.

இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார்.

தனக்கு உத்தியோகபூர்வமாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து என்னை நீக்குவதற்கான கடிதம் வராத நிலையில் நானே சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் என தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, எனது விடுமுறை நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் கடமைக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு யாழ்ப்பாணத்துக்கு வரும்போது இது தொடர்பில் முடிவு எட்டப்பட்டும் எனவும் இராமநாதன் அர்ச்சுனா நம்பிக்கை வெளியிட்டார்.

வெளியேறிச் சென்ற வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை குழுமிய பொதுமக்கள் அவரை தோளில் தாங்கிச் சென்றனர். இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதுடன் வைத்தியசாலை செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றன.

இதேவேளை வைத்தியசாலை முன்பாக குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply