அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வகையிலான ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தேக்க நிலையை அடைந்துள்ளது. இது தொடர்பில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமைக்கு காரணம், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ள பதிலையிட்டு தமது கட்சி திருப்தியடையாமையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தம்முடனான முன்னைய கலந்துரையாடலின் போது நாட்டின் ஐக்கியத்தை பேணுவது உள்ளிட்ட பல யோசனைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் ஜனாதிபதி அதற்கு உரிய பிரதிபலிப்பை காட்டவில்லை எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி தனது கட்சிக்கு உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்கினால், அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி ஜனாதிபதிக்கு எவ்வாறான நிபந்தனைகளை வழங்குவது என்பதை தீர்மானிக்க முடியும். எனினும், அதற்கு பதிலாக தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்களை ஜனாதிபதிக்கு ஆதரவான அணிக்குள் ஈர்ப்பதற்காக முயற்சிகளே ஜனாதிபதி தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையை மாற்றா விட்டால், இறுதியில் மொட்டு கட்சியின் சிலர் ஜனாதிபதியுடன் இணைவதும், பொதுஜன பெரமுனவின் மிகுதி உறுப்பினர்கள் தம் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்துவது மாத்திரமே நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு வாக்கு வங்கியின் மீது ஜனாதிபதி தனிக் கவனம் செலுத்துவதும் பேச்சுவார்த்தையில் தாமதத்தை அவர் ஏற்படுத்துவதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜசேகர, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் பலர் ஏற்கனவே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.