ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நோக்கில் தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்து இயங்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும், சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, பொ.ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளும், தமிழ்ப் பொது அமைப்புகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
தமிழ்த் தேசிய பேரவை உருவாக்குவது தொடர்பான இணக்கம் முன்னரே எட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 6ஆம் திகதி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாவது பிற்போடப்பட்டது.