கறுப்பு ஜூலை தினமான இன்று நீதி கோரி உறவுகள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்பு ஜூலை தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது மண்டபத்துக்கு முன்பாக இன்று மதியம் இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத் தரக் கோரி வடக்கு, கிழக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் மேற்படி சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய இன்று யாழ்ப்பாணத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “உறவுகள் எங்கே, நீதி வேண்டும், சர்வதேசமே கண்ணைத் திறந்து பார், உறவுகள் நீதி கோருகின்றபோது அரசே நிதியை வழங்கி ஏமாற்றாதே, எங்கள் உறவுகளுக்குப் பதில் கூறு” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கறுப்பு ஜூலை தினமான இன்று கறுப்பு ஜூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ். மாவட்ட சங்கத்துக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இன்று நடைபெற்றது. இதற்கமைய முன்னர் இருந்த சங்கத் தலைவி பூங்கோதை தலைமையிலான நிர்வாகமே மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply