பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் புத்தளத்தில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை பாடசாலையின் கணித பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான பாடசாலையின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனே ஆசிரியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த போது, பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஆசிரியர் அவரிடம் கேட்டதையடுத்து மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையில் என்ன பிரச்சினை காரணமாக கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட உயர்தரப் பாடசாலை மாணவனை, கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.