பொலிஸ் காவலில் தனிநபர்கள் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், காவல்துறையின் அட்டூழியத்தைத் தடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நீதிபதி எஸ்.துரைராஜா தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி பெஞ்ச் திறந்த நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவோ அல்லது பொலிஸ் மா அதிபரோ (ஐஜிபி) உச்ச நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்படி அதிகாரிகளால் பல்வேறு உத்தரவுகள், எச்சரிக்கைகள் மற்றும் கைதிகளை தவறாக நடத்துவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிபதி துரைராஜா மேலும் சுட்டிக்காட்டினார்.
இரண்டு மாணவர் செயற்பாட்டாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இதனைத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களால் உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அவமானப்படுத்தப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.