ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொது மக்களின் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்.
மாவத்தகமவில் நடைபெற்ற தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜபக்ச, நாட்டின் ‘சிறந்த நலனுக்காக’ முடிவுகளை எடுப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலையான சாதனைப் பதிவை வலியுறுத்தினார். “நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் அபிவிருத்தியை நிறுத்திய இடத்தில் இருந்து நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே எனக்குள்ள பொறுப்பும் சவாலும் என நான் கருதுகின்றேன்” என கருத்து தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளை மேற்கோள் காட்டி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்ததுடன் “இன்று சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இது மிகவும் கடினம். தற்போதைய அரசாங்கம் வரம்பற்ற அநீதியான வரிக் கொள்கையை அமுல்படுத்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, “கோட்டாபயவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், இந்த நாட்டு மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வரிக் கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கத் தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச உறுதியளித்தார்.