இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,620,098 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 4,347,703 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,292,575 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 341,986 வாக்குகளுடனும், பா.அரியநேத்திரன் 226,329 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். 121,969 வாக்குகளைப் பெற்று திலித் ஜயவீர 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்க, 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சில மணித்தியாலங்களுக்குள் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவுபெற்று இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏறத்தாழ 13 இலட்சம் வாக்குகள் முன்னிலையிலுள்ள அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உத்தியோகபூர்வமாகவும் சட்ட ரீதியாகவும் உறுதிப்படுத்துவதற்காகவே இந்த விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதாக ஊகிக்க முடிகிறது. எனவே, அவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்பது உத்தியோகபூர்வமற்ற முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.