“வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இராணுவ அழகக நிலையங்களை உடன் மூடுவதற்கு ஐனாதிபதியும், ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வட மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அவர் விரைவாக தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையையும் அழகக சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட நாகலிங்கம் வேதநாயகனுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
வடமாகாண அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆ.உதயசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள இராணுவ அழகக நிலையங்களை உடன் மூடுவதற்கு ஐனாதிபதியும், ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது சங்கத்துக்கு தேவையான சட்டரீதியான உதவியை பெற்றுக்கொள்ள ஆலோசனைகளை வழங்கிவரும் தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
எனவே எங்களது அங்கத்தர்வகளின் நலன் மற்றும் தேவைகள் சட்ட ரீதியான உதவிகளை யார் பெற்றுத்தர முன்வருவார்களானாலும் அவர்களது எழுத்து மூல உறுதிமொழியின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆராய ஆயத்தமாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.