புதிய சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது!

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு  நாளை  செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது.

கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக்க சபுமல் ரன்வல கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவுக்கு உத்தியோகபூர்வமாக  சனிக்கிழமை (14) அறிவித்ததை அடுத்து 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது. இதற்கு  சிறந்த மற்றும் சிரேஷ்டத்துவமிக்க ஒருவரை புதிய சபாநாயகராக தெரிவு செய்ய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை  சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பிரதி சபாநாயகரின் பெயரும் அதில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் சபாநாயகர் நியமனம் குறித்து இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் இன்று (16) விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகிறது.

பாராளுமன்ற அமர்வு நாளை (17) செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதன்போது பாராளுமன்றத்தின் முதல் பணியாக புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவது பொருத்தமானதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply