போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்தகரது வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வர்த்தகரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டின் உரிமையாளர் மேலும் பல போதைப்பொருள் வர்த்தகர்களிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் மீகொட பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில், 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களை பயன்படுத்தும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தாத தோட்டாவும் வீட்டின் முன் வீதியில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply