வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை உறுதி- உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தமையால்,கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு நீதிபதி ஆதித்ய படபாண்டிகே தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் திகதியை உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டினார்.

குற்றவாளிகள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்பார்க்கும் பட்சத்தில் தண்டனையை நிறைவேற்றும் திகதி அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதற்கமைய தண்டனையை நிறைவேற்றும் திகதி தொடர்பில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் மட்டுமே முடிவெடுக்க முடியும் எனவும் இது தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply