
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து வருகை தந்த இரண்டு சந்தேக நபர் மற்றும் 09.45 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மற்றைய சந்தேக நபர் ஆகியோர் 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 25 ,32 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவார்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 309 கையடக்கத் தொலைபேசிகள் , 08 டெப்கள் , கையடக்கத் தொலைபேசிகளின் துணைக்கருவிகள்12 மடிக்கணினிகள், 20 ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் , 05 ரவுடர்கள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.