
அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என அரசாங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்த போதும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதனால், அரிசியை அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தின் தலையீட்டினால், அரிசி இறக்குமதி செய்தாலும், அதனை சந்தைக்கு விடுவிக்க முடியாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் துறையினரின் தலையீட்டில், குறிப்பாக தனியார் துறைக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 20ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், அன்றைய தினம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், முறையான அரிசி விநியோகம் இன்மையால் மூடப்பட்ட மரதகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையத்தின் அரிசிக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி தொகை அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.