
‘ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது’ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மீண்டும் இந்திய, சீனாவின் அதிகார போட்டியில் சிக்கி இருக்கின்றது. சர்வதேச அரசியல் அப்படி இருந்தாலும் கடந்த காலத்தில் போராட்ட இயக்கமாக இருந்த NPP இன்று ஆட்சியை பிடித்துள்ளனர். இவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே,
வடக்கு – கிழக்கை மையமாக வைத்து இடம்பெறுகின்ற அத்தமீறிய குடியேற்றம் நிறுத்தப்படும்.
ஆட்சிக்கு வந்ததும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவோம்.
என சில வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால் மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை பிரச்சினையில் அந்த நிலத்தை வருடக்கணக்காக பயன்படுத்திய கால்நடை உரிமையாளர்கள் இன்று வரை வீதியில் உட்காந்திருக்கின்றனர்.
அதேபோன்று அரசியல் கைதிகள் ஒருவர் கூட இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. மேலும் வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் ஆயிரக்கணக்கான காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இவைகள் எதுவும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு வடக்கு, கிழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் தெற்கில் ஊழலுக்கு எதிராக ஆட்சி என கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்படுகின்றது. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பண ஊழல் செய்த அரசியல்வாதிகள் மற்றும் விமானப்படையின் விமானங்களை பயன்படுத்திய அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதுடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது.
அவ்வாறே 2015 தொடக்கம் 2020 வரை ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே இருந்து கோடிக்கணக்கான பொருட்கள் மாயமாகியுள்ளதை கண்டுபிடிக்கப்படுகின்றது. இவ்வாறு எதிர்காலத்தில் தாங்கள் அரசியல் ரீதியாக தெற்கிலே பலமாக இருக்கவேண்டும் என அரசியல் ரீதியாக சில விடயங்கள் நடைபெறுகின்றது.
ஆனால் கடந்த கால தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் இவர்களை நம்பி கணிசமான வாக்களித்த தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்தவண்ணமாக இருக்கின்றது.
ஜனாதிபதி கடந்தவாரம் இந்தியா சென்றிருந்தார். அப்போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என்று இந்திய பிரதமர் மோடி கூறினார்.
நாங்கள் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக ஒற்றுமையாக ஒரே கட்சியில் ஒரே கூட்டணியில் பயணித்திருந்தால் கணிசமான பிரதிநிதித்துவத்தை பெற்றிருந்தால் ஒரு பலமான அழுத்தத்தை மோடி ஜனாதிபதிக்கு கொடுத்திருப்பார். எனவே இவற்றை நாங்கள் கருத்தில் கொண்டு ஒரு பலமான ஒரே சக்தியாக தமிழ் மக்களுக்காக செயற்படவேண்டும்.
Clean Srilanka 18 பேர் கொண்ட ஒரு செயலணியை ஜனாதிபதி நியமித்துள்ளார். தெரிந்தோ அல்லது தெரியாமல் செய்கின்றாரோ என விளங்கவில்லை. ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அந்த கணிப்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது.
கோட்டாபய காலத்தில் தொல்பொருள் என்ற செயலணியை நியமித்தார். அதில் பௌத்த பிக்குகளும், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் என எந்தவிதமான நிபுணத்துவமும் இல்லாத 11 பேர் நியமிக்கப்பட்டனர்.
அனுரவுக்கு கணிசமானளவு தமிழ், முஸ்லீம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும். இந்த நாடு ஒரே நாடு நாங்கள் எல்லாம் சமத்துவமான மக்கள் என வாய்கிழிய கூறும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் இப்படியான தவறுகளை விடாமல் நடக்கவேண்டும்.
அதேவேளை 2018 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் 5 வாக்கு, 10 வாக்கு எடுத்தவர்களும் ஒரு உறுப்பினர்களாக வந்து மன்றங்களில் குழப்பநிலை ஏற்படுத்தும் நிலை இந்த முறையில் தங்கியுள்ளது. எனவே இந்த சட்டமூலத்தை கொண்டுவந்த அரசாங்கம் கூட குளறுபடியான சட்டமூலம் என ஏற்றுக் கொண்டது. எனவே இந்த சட்டமூலத்தை திருத்தி விகாதாசார முறை அல்லது வட்டாரங்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு புதிய முறையை கொண்டுவந்தால்தான் உள்ளுராட்சி மன்றங்கள் ஒழுங்காக ஆட்சியமைக்கப்பட்டு ஒழுங்கான முறைக்கு வரும் என தெரிவித்தார்.