யாழ் நகரை தூய்மையானதாக மாற்றி அமைக்க வேண்டும்- நா.வேதநாயகன்!

யாழ். மாநகர சபை 2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையால் 52.5 மில்லியன் ரூபா செலவில் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் சனிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வட மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் தூய்மையான நகரமாக இருந்தது. இன்று மோசமாக இருக்கிறது. எனவே தூய்மையான அழகான நகரமாக மாற்றி அமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மேலும், இந்த மீன் சந்தையை மிகவும் கஷ்டப்பட்டே கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகிறோம் என்பதில்தான் இது அமைக்கப்பட்டமையின் வெற்றி தங்கியிருக்கிறது. இது உங்களுக்குரிய கட்டடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு.

நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply