வட மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டில் தீர்வு- நா.வேதநாயகன்!

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தீர்வு காண எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) மாலை இடம்பெற்றது.

இதன்போது வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டியதோடு, ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடாத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வேளையில், ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற முறையற்ற இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரியப்படுத்தினர். இடமாற்றங்கள் பெயரளவுக்கே இடம்பெற்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஆசிரிய ஆலோசகர்களுக்கான இடமாற்றங்கள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், வடக்கு மாகாணத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியதுடன், ஆசிரியர்களுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கைக் கடிதம் ஒன்று ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply