இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் ஆதரவு இருக்கும்- சீன பிரதமர் வலியுறுத்தல்!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மற்றும் சீன பிரதமர் லி கியாங் இற்கும் இடையில் நேற்று பெய்ஜிங்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், முதலீடுகளை வளர்ப்பது, கலாச்சார பரிமாற்றங்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை சீன பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

“வளரும் தேசம் – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவும் இருக்கும் என்பதை வெளிப்படுத்திய சீன பிரதமர், ஊழல் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் சீனாவின் ஆதரவு இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி திசாநாயக்க தனது கருத்துக்களில், துறவி ஃபாக்சியனின் காலத்தில் இருந்தே சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை எடுத்துரைத்தார்.

அத்துடன் வறுமையை ஒழிப்பதற்கும், நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு பிரதமர் லியின் ஆதரவையும் அவர் கோரினார்.

இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் சீன அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும் ஜனாதிபதி தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply