
வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று (8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதினான்காம் லியோ என்று பெயரிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது புதிய பாப்பரசராக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
உலகளாவிய ரீதியில் 133 கத்தோலிக்க கர்தினால்கள் ஒன்று கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர்.
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வௌ்ளை புகையும், தெரிவு செய்யப்படவில்லை எனில் கறுப்பு புகையும் வௌியேறும்.
அந்தவகையில், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து முதல் இரண்டுமுறை கரும்புகை வெளியேறியிருந்தது. மூன்றாவது முறையாக வெண்புகை வெளியேறி புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மக்களுக்கு தெரிவித்தனர்.
69 வயதான பாப்பரசர் லியோ, அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதை அடுத்து, உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் தலைவராக பாப்பரசர் லியோ தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.