
இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 18ஆவது ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தரம்சாலா விளையாட்டரங்கில் மே 8ஆம் திகதி இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அயல் நகரங்களில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டது.
இதன்பின்னர் ஐபிஎல் போட்டிகளை இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்தது.
தற்போது போர் நிறுத்தம் காரணமாக மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி ஜெய்பூரில் மே 24ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.
எஞ்சியுள்ள லீக் போட்டிகள் யாவும் 6 மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளே ஓவ் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது தகுதிகாண் போட்டி மே 29ஆம் திகதியும், நீக்கல் போட்டி மே 30ஆம் திகதியும், இரண்டாவது தகுதிகாண் போட்டி ஜூன் 1ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் திகதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.