275 கடற்படையினருக்கு கொரோனாத் தொற்று!

“வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 275 படையினரும், அவர்களின் 21 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“- இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

275 கடற்படையினரில் 217 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருந்தும், 58 பேர் விடுமுறையில் வீடு சென்றிருந்த நிலையிலும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 25 நோயாளர்களில் 18 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும், ஏனைய 7 பேரில் 6 பேர் கடற்படையினரின் உறவினர்கள் எனவும் அவர் கூறினார்.

கடற்படையினரின் உறவினர்களான 6 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவரும் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அடங்குகின்றார் எனவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir