ஈரானிய நாட்டின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் குழு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.
ஈரானிய நாட்டின் அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன. மேலும், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை, “ஈரானிய வெடிகுண்டு உலகின் தந்தை” என ராஜீய அதிகாரிகள் அழைப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் அரசு, அதன் அணுசக்தி மேம்பாட்டுக்காக யுரேனியம் செறிவூட்டலை பெருக்கி வருவதாக வல்லரசு நாடுகள் கவலை வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டின் அணுசக்தி தலைமை விஞ்ஞானி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்நாட்டின் அணுசக்தி சிவில் திட்டங்களுக்கு மட்டுமின்றி ராணுவ அணு ஆயுத திட்டங்களுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.
2010-2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலபகுதியில் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இரான் குற்றம்சாட்டியது.