நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதை ஒத்திவைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முதலில் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான சட்டத்தரணி சரித குணரத்ன மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அது தவிர, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேராசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரி, எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி ஆகிய 08 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதன்பின்னர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தலைமையிலான மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மனுவைத் தாக்கல் செய்தது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாகயம் முன்னாள் எம்.பி. ரஞ்சித் மத்தும பண்டாரவினாலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை தடுக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 02 இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 இல் தேர்தல் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுடன் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மார்ச் 21 இல் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் தற்போது ஜூன் 20 இல் தேர்தல் நடத்தப்படுமென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 03 மாதத்தினுள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனைவிடுத்து ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவது சட்டவிரேதமானதெனவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவியுள்ள நிலையில் தேர்தல் நடத்துவது வாக்காளர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும். எனவே, தேர்தல் நடத்துவதை தடுப்பது தொடர்பான உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தும் வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் நிலையில் இந்த மனுக்கள் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.