விடுதலைப்புலிகளுக்கு கெஹலிய புகழாரம்!

“இலங்கையில் தற்போதைய எதிர்க்கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டன.”

– இவ்வாறு அரச பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான கெஹலிய ரம்புவெல தெரிவித்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் அவர் கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து புகழாரம் சூட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் கூறுகையில்,

“எமது நாட்டு மக்கள் மிகவும் இலகு மனம் கொண்டவர்கள். சுனாமி அழிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்கள் இருக்கவில்லை. அப்போது சிறுபிள்ளைகள் கூட தங்களால் இயன்றவற்றை இல்லாதவர்களுக்கு கொடுத்துதவினார்கள். ஆடைகளைக்கூட தானம் செய்தார்கள்.

இந்தநிலையில்தான் தற்சமயம் அரசுக்கு உதவுமாறு அரச ஊழியர்களிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலாத்காரமல்ல, அவர்களால் முடியுமான உதவியை ஊழியர்கள் செய்யலாம். தற்போதைய எதிர்க்கட்சி செய்கின்ற செயற்பாடுகளைப் பார்த்தால், அவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னுதாரணமாக நடந்துகொண்டார்கள் என்றே கூறவேண்டும்.

அதற்காக நான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நற்சான்றிதழ் அளிப்பதாக எண்ணிவிட வேண்டாம். வடக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் படையினர் அங்கு சென்றபோது அவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. எமது படையினர் அங்கு தமிழ் மக்களுக்கு உதவி செய்யவே சென்றார்கள். அந்தச் சேவைக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் கௌரவம் கொடுத்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளிடம் காணப்பட்ட மனிதாபிமானத்துடனான அந்த நற்பண்புகள்கூட இன்றைய எதிர்க்கட்சியினருக்கு இல்லை என்பதே கவலை” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir