நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான மேலும் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
ஊடரங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்குள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக தெரிவித்துள்ளார். அலுவலக நேரங்களை அடிப்படையாகக் கொண்டு பஸ்கள் இயங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேவையேற்படும் பட்சத்தில் கட்டணங்களை அறவிட்டு, அலுவலகங்களுக்குப் பிரத்தியேக சேவையை வழங்குவதற்கும் தயாராகவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
மாவட்டங்களுக்குள் பயணிப்பதற்கு மாத்திரமே அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தவிர, வைத்தியசாலைகளில் சுகாதார சேவை ஊழியர்களுக்கான போக்குவரத்துக்காக நாடு முழுவதும் 426 பஸ்களை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை மேலும் கூறியுள்ளது.