சுமந்திரனின் கருத்துக்களை ஏற்கவேமுடியாது; கூட்டமைப்பின் பங்காளி புளொட் திட்டவட்டம்

தமிழின விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்திய இளைஞர்கள் தமது உயிர்களையே அர்ப்பணிப்புச் செய்துள்ளனர். அவர்களின் விடுதலை வேட்கையையும், தியாகத்தையும், தமிழ் மக்கள் அதற்களித்த உணர்வு ரீதியான ஆதரவையும் எவராலும் கொச்சைப்படுத்த முடியாது. ஐந்து வயது முதல் கொழும்பில் வாழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தமிழின ஆயுதப் போராட்டத்தை – அதன் உணர்வெழுச்சியை அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.”

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“தமிழின விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவன் என்ற வகையில் ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கும் சுமந்திரனின் கருத்துக்களை எந்தவொரு வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழின விடுதலைக்காக ஆயுத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தும், அந்தப் போராட்டத்தை வன்முறை செயற்பாடுகளாகச் சித்தரித்தும் விமர்சன ரீதியான கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள மொழியிலான செவ்வியொன்றின்போது முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே புளொட் தலைவர் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளையும், விடுதலையையும் வென்றெடுப்பதற்காகத் தமிழ்த் தலைவர்கள் சாத்வீக முறையில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

அவர்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் மறுதலிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் நகரமுடியாத இக்கட்டான சூழலொன்று ஏற்பட்ட தருணத்திலேயே தனிநாட்டை முன்னிலைப்படுத்தி ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலையைப் பெற முடியும் என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது.

இதற்குத் தமிழ்த் தலைவர்களினதும் முழுமையான ஆதரவும், ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டன. தலைவர்களால் நேரடியாகக் களமிறங்க முடியாத நிலையில் இளைஞர்களே களமுனைக்குச் சென்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆரம்பத்தில் மாணவர் பேரவை போன்ற கட்டமைப்புக்கள் அமைக்கப்பட்டபோது பின்னர் சிவகுமாரன், அளவெட்டி ஆனந்தன் போன்றவர்கள் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கு வித்திட்டார்கள். இதனடிப்படையில் ஆயுதக் குழுக்கள் தோற்றம்பெற்றன.

அவ்வேளையில்தான் பிரபாகரன் புதிய புலிகள் என்ற கட்டமைப்பை ஆரம்பித்தார். பின்னர் அதனைத் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயர் மாற்றத்திற்கு உட்படுத்தி அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச் சென்றார். அதுமட்டுமன்றி ஆயுதப் போராட்டத்தைக் கூர்ப்படையச் செய்து மூன்று தாசப்தங்களாக நகர்த்திச் சென்றிருந்தார்.

தமிழின விடுதலைக்காகப் பிரபாகரன் மற்றும் அவரது அமைப்பினர் உட்பட ஏனைய ஆயுத விடுதலை இயக்கங்கள் அனைத்தையுமே அன்றை சூழலில் தமிழ் மக்கள் உணர்வு ரீதியாக ஆதரித்தார்கள். பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதோடு இயக்கங்களின் செயற்பாடுகள் மீது அதியுச்ச அபிமானத்தையும் கொண்டிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த விடயங்களை ஐந்து வயதிலிருந்து கொழும்பில் வசித்து வரும் சுமந்திரன் உணர்ந்து கொள்வதற்கோ அல்லது அறிந்திருப்பதற்கோ வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன என்றே கருதுகின்றேன்.

மேலும், விடுதலை இயக்கங்கள் செயற்பட்டு வந்த காலத்தில் ஆயுதமேந்திய போராளிகள் கைதுசெய்யப்பட்டு நெருக்கடிகளைச் சந்தித்த காலத்தில் எல்லாம் தமிழ்த் தலைவர்கள் ஆஜாராகி அவர்களை விடுதலை செய்வதில் தீவிரமாகச் செயற்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

இதனைவிடவும் 2001இல் தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய விடுதலை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளே செயற்பட்டிருந்தனர் என்பதையும் மறுக்க முடியாது. அத்துடன் அவர்களின் பணிப்பிலேயே தமிழ் மக்கள் அதிகளவான உறுப்பினர்களைக் கூட்டமைப்புக்காகத் தெரிவு செய்திருந்தனர் என்பது வெளிப்படையானது.

இவ்வாறிருக்க, ஆயுத விடுதலைப் போராட்டம் தொடர்பில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகள் காணப்படலாம். அவை அனைத்துமே அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயாகும். இருப்பினும், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவன் என்ற அடிப்படையில் சுமந்திரனின் ஆயுதப் போராட்டம் தொடர்பான கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

தமிழின விடுதலைக்காகவே அத்தனை விடுதலை இயக்கங்களும் ஆயுதங்களை ஏந்திப் போராடியிருக்கின்றன. அதில் எத்தனையோ உயிர்த் தியாங்களும், அர்ப்பணிப்புக்களும் அடங்கியிருக்கின்றன என்பதைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir