யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா, சாம்பல்தோட்டம் குளப்பகுதியில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சாம்பல் தோட்டம் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர மற்றும் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன ஆகியோர் இணைந்து இத் திட்டத்தை பார்வையிட்டு ஆரம்பித்து வைத்தனர்.
யப்பான் நாட்டில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சிறப்பான நீர் முகாமைத்துவத்தின் கீழ் விவசாய செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இம் முறையைப் பின்பற்றி இலங்கையில் முதன்முதலாக வவுனியா சாம்பல்தோட்டம் குளத்தில் இருந்து குழாய் வழியாக விவசாய நடவடிக்கைளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 48 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் செயற்திட்டம் மூலம் 75 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது காலபோகத்தில் 59.5 ஏக்கரும், சிறுபோகத்தில் 15 ஏக்கரும் செய்கை பண்ணப்பட்டு வரும் நிலையில் இத் திட்டத்தின் மூலம் 75 ஏக்கர் வரை கால போக்கத்திலும், 30 ஏக்கர் வரை சிறு போகத்திலும் நெற் செய்கை பண்ணக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாம்பல் தோட்டம் குளத்தில் இருந்து கால்வாய்களைப் பயன்படுத்தாது குழாய் மூலம் நீர் வயல் நிலங்களுக்கு, விநியோகிப்பதால் நீர் வீண்விரயம் செய்யப்படுவது தடுக்கப்பட்டு விளைநிலப்பரப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த திட்டமானது வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், வவுனியா வடக்கு நாகர்குளம் ஆகிய இடங்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.