காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து, கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் அருகே, விசைப்படகு கட்டும் தளம் உள்ளது.
இந்த தளத்தைச் சுற்றி உடைந்த படகுகள், பிளாஸ்டிக், மரத்துண்டுகள் உள்ளிட்ட கழிவுகள் மலை போல குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பராமரிப்பின்றி மோசமான நிலையில் இப்பகுதி உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.காசிமேடு கடல் பகுதியிலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக மிதக்கின்றன. இவ்வாறு, தொடர்ந்து கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பையும் அதிகரித்து வருவதால், மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:காசிமேடு கடற்கரை செல்லும் வழியெங்கும் குப்பைக் குவியலும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்துள்ளன.
கடலிலும், கழிவுப் பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உள்ளன. இதனால், மீன் பிடிக்கும் போது விசைப்படகுகள் கவிழும் நிலை ஏற்படுகிறது.மீன் பிடிக்கும் வலைகளில் சில நேரங்களில், பிளாஸ்டிக் மற்றும் குப்பை மாட்டிக் கொள்ளும். கடந்த ஒரு வாரமாக குப்பை மற்றும் கழிவுப் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளது. கடல் மாசு, சுற்றுப்புறசூழலுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால். கடலில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்ற, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.