நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த கணவரை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் (32).
விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் இலக்கியா (26).
இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பஸ்சில் சென்று வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தையுடன் தர்மபுரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட பாலமுருகன், சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் இலக்கியா குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார். பாலமுருகனும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தினார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார். அவரை இலக்கியா தள்ளி விட்டதில் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார்.
இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காயமடைந்த பாலமுருகனை மீட்டு இடைப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர்.விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.