சென்னையில், 2015ல் பெய்த கனமழையின் போது கொசஸ்தலை ஆறு, புழல் உபரி நீர் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வடசென்னை, திருவள்ளூர் தெற்கு பகுதிகள் மூழ்கின.
இந்த வெள்ளத்தில் பாடம் கற்றும், முதல்வர், தலைமை செயலர் நேரில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கியும், தற்போது பருவமழை துவங்க உள்ள நிலையில், மழை முன்னெச்சரிக்கை பணிகளை அதிகாரிகள் அரைகுறையாகவே செய்துள்ளனர்.
சென்னை புழல் ஏரி நிரம்பினால் உபரி நீர், தண்டல் கழனி, சாமியார் மடம், கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயில், சடையங்குப்பம், எண்ணுார் முகத்துவாரம் வழியாக 13.5 கி.மீ., பயணித்து, கடலில் கலக்கும்.வாய்ப்பில்லைகடந்த, 2015ல் கொட்டித் தீர்த்த மழைக்கு, ஏரி முழுவதுமாக நிரம்பி, இரு மதகுகள் வழியாக வினாடிக்கு, 10 – 14 ஆயிரம் கன அடி வரை, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.ஆமுல்லைவாயல், பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம் பாலம் போகும் பாதை போன்றவை உபரிநீரால் மூழ்கடிக்கப்பட்டு, பல ஊர்கள் துண்டிக்கப்பட்டன.
இதற்கு, உபரி கால்வாய் துார்வாரப்படாதது மிக முக்கிய காரணமாக இருந்தது. கடந்த மாதம், புழல் உபரி கால்வாய் துார்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின், மணலி, ஆமுல்லைவாயல் அருகே பார்வையிட்டு, பணிகளை முடுக்கி விட்டார்.ஆனால், முதல்வர் பார்வையிட்ட பகுதியில் மட்டும், ஆகாய தாமரை அகற்றப்பட்டுள்ளது.