தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட சம்பவம் அதிஉச்ச அடக்கு முறையின் வெளிப்பாடு என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில், கஜேந்திரகுமார் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டமையை தான் வன்மையான கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மக்கள் பிரதிநிதியான ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுத முனையில் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றால், சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் வெளியிடுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.