உள்ளூராட்சி சபை தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைப்பது பொருத்தமானது அல்ல என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் பாரிய பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல. இந்த நேரத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
முடியாத பட்சத்தில் மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். ஏனெனில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வெள்ளை யானைகளை வைத்திருப்பதில் பலனில்லை.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், காட்டுச் சட்டத்தை அகற்றுவதற்கும், நாட்டின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்துவதற்குமே பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்” என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.