புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைக்கும் 2023 – 2026 மற்றும் 2026 – 2030 வரையிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் (CEB), நிலையான எரிசக்தி அதிகார சபைக்கும் (SEA) இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்று அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றதாக காஞ்சன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, காலாவதியான தற்காலிக அனுமதிகளையும், ஒப்பந்தம் விடப்பட்டும் செயல்படுத்தப்படாத திட்டங்களையும் ரத்து செய்யுமாறு இலங்கை மின்சார சபைக்கும் மற்றும் நிலையான எரிசக்தி அதிகார சபைக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் குறித்த சந்திப்பில், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (NCRE) துறையைச் சேர்ந்த மேம்பாட்டாளர்களுக்குச் செலுத்த வேண்டிய பணம், புதிய கட்டணத் திட்டம், அடுத்த 18 மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டங்கள், எரிசக்தி அனுமதி மற்றும் தற்காலிக அனுமதியின் கீழ் வழங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் விவாதிக்கப்பட்டன.