சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொறுப்புக்கூறல் தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளின் சில பகுதிகள் நிராகரிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஆரம்பமான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜூன் மாத அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பல தசாப்தமாக ஆணைக்குழுவைச் சேர்ந்த பலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆணைக்குழு தொடர்ந்தும் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலம் மட்டுமே மனித உரிமைகளை மேம்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.