இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது.
இந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ளது.
இந்நிலையில், முற்பகல் 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை நடைபெறவுள்ளதாகவும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.