உக்ரைன் எதிர்பார்த்ததை விட மொதுவான பதிலடி தாக்குதலே அமைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
15 மாத போர் நடவடிக்கையில் அதிகப்படியான ஆயுத கையிருப்பு உறுதிப்படுத்திய பின்னர், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிரான பதிலடி தாக்குதலை அறிவித்தார்.
இந்த பதிலடி தாக்குதலின் மூலம் 7 மாதங்களுக்கு பிறகு ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 8 உக்ரைனிய கிராமங்களை உக்ரைனிய ஆயுதப்படை மீட்டுள்ளது.
இருப்பினும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தாங்கள் எதிர்பார்த்ததை விட பதிலடி தாக்குதல் மெதுவாகவே அமைந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், சில மக்கள், பதிலடி தாக்குதல் என்பது ஹொலிவுட் படம் போன்றது என நம்பி உடனடி முடிவுகளை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது அப்படி அல்ல, ஆபத்தில் இருப்பது மக்களின் உயிர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எப்படி இருப்பினும் உக்ரைனிய படைகளால் ரஷ்யாவின் முக்கிய தற்காப்பு எல்லையை அடைய முடியவில்லை என்பதையும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ள உக்ரைனின் 77,220 சதுர மைல் பரப்பளவில் அதிகமான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
இதனால் உக்ரைனிய படைகளின் முன்னேற்றம் கடினமாக உள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு அழுத்தம் தருவது சிலருக்கு தேவைப்படலாம், ஆனால் அனைத்து சிறந்த வழிகளிலும் போர்க்களத்தில் முன்னேறுவோம் என ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.