தமிழரிடமிருந்து பறிக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் – கஜேந்திரகுமார் காட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலேயே அதிகளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், இதன் காரணமாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட இரு மாவட்டங்களிலும், சில பிரதேசங்கள் ஆட்கள் இல்லாத பகுதிகளாகவும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் பகுதிகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அங்கிருந்து மக்களை வெளியேறுமாறும் இராணுவம் கோரியிருந்த நிலையில், குறித்த பகுதியிலிருந்து மக்கள் முற்று முழுதாக வெளியேறியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முல்லைதீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் மேற்கு, சின்னக்குளம், முத்திரிகைகுளம், ஆமையான் குளம், சாம்பன்குளம், தட்டாமலைக்குளம், பறையனாறு வயல் நிலங்கள், சூரியநாராயனாறு வயல் நிலங்கள் என்பனவும்,

வவுனியா வடக்கில் கொக்கச்சான்குளம், கச்சல் சமனல்குளம் ஆகிய பிரதேசங்களும் இதில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறிச் சென்றதன் பின்னர் 2009 ஆம் ஆண்டே அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 ஆண்டுகால யுத்தத்திற்கு பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்று, பொருளாதார மற்றும் வாழ்வாதார மீட்சிக்கு முயற்சிக்கும் போது இந்த காணிகள் அவர்களுடையது அல்லவெனவும், வேறொருவருடையது எனவும் கூறப்படுகின்றது.

அந்த இடங்கள் திட்டமிட்ட வகையில் புவியியல் ரீதியில் மாற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள், மூலம் சனத்தொகை பரம்பலை மாற்றியமைத்து, 30 ஆண்டுகளாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்டது எனவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைகளை கூட தமிழ் மக்களின் கைகளில் இருந்து பறித்தெடுத்து, சிங்கள மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், சிங்கள பௌத்த தேசியவாதம், சிங்கள பௌத்த இனவாதம், காரணமாக எவ்வாறான தாக்கம் ஏற்படும், மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தொடர்பில் கூட ராஜபக்ஷவினர் சிறிதும் கரிசனை கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் மக்களிடமிருந்து அடாத்தாக கொள்ளையிடப்பட்ட நிலங்களுக்கான பத்திரங்கள் கூட தமிழ் மக்கள் வைத்துள்ளனர்.

எனினும், சட்டவிரோதமாக தமிழ் மக்களின் இந்த காணிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, பெரும்பான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்கள் நூற்றாண்டுகாலமாக, பரம்பரை பரம்பரையாக பயிர் செய்த இடங்களில் தற்போது, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வவுனியா நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சர்வதேச அழுத்தங்களை அடுத்தே மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply