நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று, ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய பௌதீக திட்டத்தின் வரைவு ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரணதுங்க தெரிவித்தார்.
இத்திட்டம் பொதுமக்களால் பரிசீலனை செய்யப்பட்டு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்திருப்பதை வலியுறுத்திய ரணதுங்க, நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் உட்பட பல்வேறு முக்கிய அபிவிருத்தி முயற்சிகளுக்கு தேசிய பௌதீகத் திட்டம் ஒரு வரைபடமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
இரண்டு வருட முன்னோடி திட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டத்தின் நடைமுறையாக்கம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.