ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளமையை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் பதற்றமும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள் முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர் எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.
எனினும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
இது இராணுவசதிப்புரட்சியில்லை நீதிக்கான பயணம் என தெரிவித்த அவர் தனது குழுவினர் உக்ரைனிலிருந்து ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
பிரிகோஜின் இந்த அறிவிப்பின் பின்னர் ரஸ்யா முழுவதுமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று ரஸ்யாவின் தென்பகுதி நகரமான ரொஸ்டொவ் ஒன் டொன் நகரை தமது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வாக்னர் கூலிப்படையினர் இராணுவதலைமையகத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.
வாக்னர் கூலிப்படையின் தலைவர் ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் அந்த நகரின் இராணுவதலைமையகத்திற்குள் இருப்பதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
நான் இராணுவதலைமையகத்திற்குள் இருக்கின்றேன் இராணுவத்தின் கட்டிடங்கள் எங்கள் வசம் வந்துள்ளன எனவும் அவர் குறித்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
பின்னர், வாக்னர் குழுவினர் மொஸ்கோவை நோக்கி செல்கின்றனர் என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு தகவல்கள் வெளியாகியிருந்தது.
வொரனஜோ பிளாஸ்ட் என்ற நகரத்திலிருந்து அவர்கள் வடபகுதியை நோக்கி செல்கின்றனர் நிச்சயமாக கூலிப்படைகள் மொஸ்கோவை இலக்குவைக்கின்றன என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.
இதற்கிடையில், மொஸ்கோவிற்கும் ரொஸ்டொவ் ஒன் டொன் நகரிற்கும் இடையில் உள்ள வொரோனெஸ் நகரையும் வாக்னர் கூலிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டன.
அத்துடன், வாக்னர் கூலிப்படைகளின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அந்த நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதமொன்றின் மீது ரஸ்ய ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாக்னர் கூலிப்படையினர் மொஸ்கோவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விமானம் மொஸ்கோவின் விமான நிலையமொன்றிலிருந்து புறப்பட்டுள்ளதாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்தது.
புட்டின் அந்த விமானத்திலிருந்தாரா என்பதை உறுதி செய்யமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.