இலங்கையில் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் இன்றைய தினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே சீன வௌியுறவு அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இயலுமான வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் ஒத்துழைப்பு தொடர்பில் சீனா முன்மாதிரியாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்கும் இலங்கை தூதுக்குழுவை அலி சப்ரி வழி நடத்துகிறார்.
உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தி’ என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மன்றம், உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களிடையே உரையாடலுக்கான தளத்தை வழங்கும். இது பொருளாதார சவால்களில் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அமைச்சர் அலி சப்ரி, இழந்த பத்தாண்டுகளைத் தடுப்பது என்ற வட்ட மேசை மாநாட்டிலும், எதிர்கால பொருளாதாரத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்ற தலைப்பிலான பங்குதாரர்களின் கலந்துரையாடலிலும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.