ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உடனான சந்திப்பும் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் இந்த விசேட கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தேசிய கடன் மறு சீரமைப்பு, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் கடன் மறு சீரமைப்பு திட்ட யோசனை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஏனைய தீர்மானங்களை விட கடன் மறுசீரமைப்பு தொடர்பிலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொது நிதிக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அத்தோடு வெள்ளியன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சனிக்கிழமை இடம்பெறவிருக்கும் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை மீதான விவாதம் நாடாளுமன்ற விவாதம் குறித்து இதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
இதேவேளை மாலை 5 மணி அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சிக்குழு கூட்டமும் இக்கூட்டத்தில் கடன் மறு சீரமைப்பு திட்ட யோசனையை நாடாமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட உள்ளது.
எனினும் இதன்போது அமைச்சுப் பதவிகள் மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சில காரணிகள் தொடர்பிலும் பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.